10 April, 2014

மைனாரிட்டி பாய்ஸ்

10-ஏப்ரல்-2014
சென்னை

 அது பத்தாம் வகுப்பு அரைப்பரீட்சை நேரம். பாய்ஸ் மேல், அதுவும் சீனியர் பாய்ஸ் மேல் ஒரு இனம் காணாத வெறுப்பு குடி கொண்டிருந்தது.முதலில் வெறுப்புக்கான காரணா காரியங்களை ஆராய்ந்து விட்டு, அந்த வெறுப்பு அலை என்னைப் போன்ற ஒரு அப்பிராணியை எப்படி அடித்தது என்பதற்கு வருவோம்.

 பள்ளிக்கூடம் 25 வருஷமாக இயங்கி வந்தது. நிர்வாகம் எல்லாம் ஸிஸ்டர்ஸ் கையில் தான். ரொம்பவே சிம்பிலான ஒரு ஆர்கணோகிராம். பள்ளி, இரண்டு பஸ், ஒரு சர்ச், ஹாஸ்டல், அதோட சேர்ந்த ஆடு, மாடு, வைக்கோல் போரு, பாலமாண் ஆற்றையொட்டிய திடல் எல்லாத்தை நிர்வகிக்க ஒரு குடு குடு மதர்; பள்ளி நிர்வாகத்துக்கு, டீச்சர்களை விரட்ட, ரேங்க் கார்ட் கொடுக்க ஒரு ஹெச்.எம்; இங்கிலீஷ் க்ளாஸ் எடுக்க, பிரம்பால் அடிக்க, ஒரு அசிஸ்டண்ட் ஹெச்.எம்; பேனா, பென்ஸில் நோட்டு விக்க, எந்த வம்புக்கும் போகாத பென்னி ஸிஸ்டர். சர்ச்சை ஒட்டி இருந்த அவுட் ஹவுசில் ஒரு ஆஜானுபாகுவான புள்ளட்டில் பவணி வரும் ஃபாதர்.

பல வருஷமா ஒழுங்கா ஒடிக்கிட்டு இருந்த வண்டியில குறுக்க வந்தது ஒரு பதினோராம் வகுப்பு காதல், இது எல்லாம் சகஜம் தானே. அந்த வயசுக்கு அது சகஜம் தான், ஆனா சிதம்பரம் மாதிரி ஊரில் கிளி மாதிரி இருக்குற டாக்டர் வீட்டு தெலுங்குப் பொண்ணு, அதுவும் பத்தாவதுல முதல் ராங்க் வாங்குன பொண்ணு ஒரு முஸ்லிம் பையனை காதலிச்சா கொஞ்சம் சிக்கல் தான். ஆவன செய்து முறையே காதல் பிறிக்கப்பட்டது. இந்த பிரச்சனை முடிந்த கையோட ஏழாவது பி செக்ஷனில் யாரோ யாருக்கோ எழுதிய மொட்டை காதல் கடிதங்களும், யார் எழுதியதுனு கண்டுப்பிடிக்க நிர்வாகம் பட்ட பாடும் தனிக் கதை. தனிக் கதைகள் சிறுகதைகளாய் நின்று விடாமல் தொடர் கதையையாய் நீண்டன. நான் ஒன்பதாவது படிக்கும் போது, அடுத்த செக்ஷனில் தன் பென்ச்சில் ‘அபிராமி’ என எழுதிய பித்தனை பற்றி அபிராமி போய் 11-ஆம் வகுப்பு வாணியக்காவிடம் அழுது வைக்க, பள்ளியில் இருந்த சார் எல்லாம் சேர்ந்து ஸ்டாஃப் ரூமில் அவனை வெளுத்து ஒரு வாரத்தில் டி.சி. கிழிக்கப்பட்டது. இது தவிர, நைட் ஸ்டடியில் நடந்தவை என வயசுக்கு மீறிய, புறியாத கதைகள்.

சமாளிக்க முடியாத நிலையில், பாய்ஸ் மேல் பழி போடப்பட்டது. பழி விழுந்த கையோடு, 11-12ஆம் வகுப்புகளில் ஆண்களை சேர்ப்பதில்லையென முடிவு செய்யப்பட்டது. 10-12 வருடமாக படித்த நல்லோன், சான்றோனெல்லாம் கூண்டோடு ஊருக்கு வடக்கே காளி கோயிலுக்கும் பலான படங்கள் மட்டுமே ஓடும் ப்ளூ-டைமண்ட் தியேட்டருக்கும் நடுவே ஒரு குறுக்குச்சந்தில் காலந்தள்ளிக் கொண்டிருக்கும் வேறொரு பள்ளிக்கு துரத்தப்பட்டனர். பெற்றோர் பலர் போராடியும் பயனில்லை.

அவர்கள் துரத்தப்பட்ட கையோடு ஒண்பதாம் வகுப்பிலிருந்து பத்துக்குப் போகும் எங்கள் வகுப்பிலும் கை வைக்கப்பட்டது. 55-ஆக இருந்த வகுப்பு எண்ணிக்கை நாற்பதாக்கப்பட்டது. நாங்கள் ஜெயராஜ், விக்ரம் போன்ற தீற்க்கதரிசிகளை இழந்தோம். பத்தாம் வகுப்புக்கு வந்த கையோடு மெஜாரிட்டியும் இழந்தோம். நாற்ப்பதில் 18 பாய்ஸ் – 22 கேர்ள்ஸ்; ஒண்பதாம் வகுப்பில் நான்காவது வரிசையில் உட்கார்ந்திருந்த நான், பத்திலும் நான்காவது வரிசையில் தான் உட்கார்ந்திருந்தேன். அன்று எனக்கு பின்னே மூன்று பெஞ்சுகள், இப்போது ஒரே ஒரு கடைசி பெஞ்ச் – அதிலும் இரண்டே பேர். நாங்கள் பெரும்பான்மை இழந்தாலும், 2007-2011 வரை தமிழகத்தில் ஆட்சி செய்த மைனாரிட்டி தி.மு.க. அரசைப் போல பெருமை இழக்காமல் இருந்தோம்.

எங்கள் மேலான அடக்குமுறைகளும், சட்ட ரீதியான கெடு பிடிகளும் அதிகமாயின. பொறுத்துக் கொள்வதை தவிர வேறு வழி இல்லை. 40 நிமிட உணவு இடைவேளையில் 15 நிமிடம் விளையாடிக்கொண்டிருந்த ஏ செக்ஷன் – பி செக்ஷன் கபடியாட்டங்களுக்கும் தடை உத்தரவு வந்தது. 9-ஆம் வகுப்பிலிருந்த சில சொம்பன்களை பிடித்து பி.டி. வாத்தியார் ஒரு டிஸிப்பிளின் கமிட்டி அமைத்தார். அந்த கமிட்டியும் எங்களை விடாக்கொண்டனாய் கண்காணித்து வந்த போது தான் அந்த சம்பவம் நடந்தது…..



மதிய உணவு இடைவேளை 1 மணிக்கு முடிந்ததும், வகுப்பு வாரியா வந்து கிரவுண்டில் வரிசையா நின்று வகுப்புக்கு போகனும். ஆனால், 1.20 க்கு தான் முதல் பீரியட். சில சமயம் 1 – 1.20, வகுப்பாசிரியை வருவாங்க, இல்லைனா மொக்கை தான். 9-வது வரை கிறுஸ்துவ பிள்ளைகளுக்கு அந்த நேரத்தில் கேதிஸம் (பைபிள்) வகுப்பு நடக்கும். எங்களுக்கு ஒரு பழக்கம் இருந்தது. இருக்கும் 18 பேரில் ஏறக்குறைய எல்லோரும் சரியா ஒரு மணிக்கு வரிசையில் நிற்கப்போகாமல் சர்ச்சிற்கு வலது புறம் புதர் மண்டிய வேலியோரத்தில் சிறுநீர் கழிக்க போவதை வழக்கமாக கொண்டிருந்தோம். எதோவொரு வகையில் இந்த சிறு அத்துமீறல் எங்கள் மனதிற்க்கு ஒரு ஆறுதல் தந்தது.

பல நாள் பொறுத்திருந்த டிஸிப்பிளின் கமிட்டி, திட்டமிட்டு மூன்று திசைகளிலிருந்து வந்து சுற்றி வளைத்தனர். அகப்பட்டோம். பி.டி. சாரிடம் ஒப்படைக்க, வாழ்க்கையின் ஒரு அழியாத தழும்பு மெல்ல நடந்தேறியது. கிரவுண்டில், அசெம்பிளி மேடைக்கு முன் முட்டி போட வைக்கப்பட்டோம். முழு பள்ளியும் வரிசையாய் எங்களைத் தாண்டி, எங்களைப் பார்த்த படி வகுப்புக்கு சென்றது. ஒரே ஒரு முறை நான் தலையைத் தூக்கி பார்க்க யாரோ ஒருவன் சிரித்து விட்டு சென்றான். 10 நிமிடம் யுகமாய் கடந்தது.

அவமானத்திற்கு பின்னான பொழுதில் மனம் ஆறுவதில்லை, ஆயினும் அந்த கறையை மறைக்கவோ அழிக்கவோ முற்படுகிறது. முதலில் தம்பியிடம் பேசி வீட்டிற்க்கு விஷயம் போகமலிருக்க ஆவன செய்தேன். ரஜினி ஒரு படத்தில் ஊரே பார்க்க வேட்டியில்லாமல் வந்துவிட்டு, வீட்டில் சுஹாசினி பார்த்திருக்க கூடாது-னு நினைப்பார். அதுவே இங்கும் குறிக்கோள்.   
ஒரு நாள் கடந்தது. அம்மாவிடம் கணிதம் படிக்க எங்கள் பள்ளியிலிருந்து வரும் இருவரில் மனோஜ்-ங்கற பையன் அம்மா முன்னாடியே அப்பாவியா கேட்டான், “ அண்ணா, ஏன்னா நேத்து எல்லாரும் கிரவுண்டில முட்டி போட்டீங்க?”

உடைந்தது பானை.

No comments:

About Me

My photo
Baroda, Gujarat, India
Nagappan Ramanathan Baroda, Gujarat, INDIA "My blog will let you know about me . . am too humble to talk about myself . ."

Followers